ஸ்ரீமதி மரண வழக்கு - "வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை" - நீதிமன்றம் அதிரடி உத்தரவு


ஸ்ரீமதி மரண வழக்கு - வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
x

ஸ்ரீமதி மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் நிபுணத்துவம் இல்லாத வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

கனியாமூர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவி ஸ்ரீமதி திடீரென மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்துவரும் நிலையில் ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை அறிக்கையின் படி அவர் கொலை செய்யப்படவில்லை என்றும் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும் சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்திருந்தது.

மேலும் ஒரு மாணவியை நன்றாகப் படி என்று ஆசிரியர்கள் கூறியதற்காக அவர்கள் சிறையில் வாடுவது சரியானதல்ல என்றும் நீதிபதி கருத்து தெரிவித்த நிலையில் ஐகோர்ட்டின் இந்த கருத்தை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் சிறுமியின் பெற்றோர் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் ஸ்ரீமதி மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் நிபுணத்துவம் இல்லாத வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பார் கவுன்சிலுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் நிபுணத்துவம் இல்லாத வழக்கறிஞர்கள் 2 பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் ஒப்பிட்டு மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்கின்றனர் என்றும், வழக்கறிஞர்கள் தனியாக விசாரணை நடத்துவது வழக்கறிஞர் தொழிலுக்கு ஏற்றது அல்ல என்றும் ஐகோர்டு தெரிவித்துள்ளது. மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


Next Story