கண்காணிப்பு கேமரா காட்சிக்காக ஒரு வாரமாக நீடித்த மர்மம் விலகியது: மாணவி ஸ்ரீமதி இரவில் பள்ளியில் இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு இரவு 9.30 மணிக்கு பிறகு என்ன நேர்ந்தது?


கண்காணிப்பு கேமரா காட்சிக்காக ஒரு வாரமாக நீடித்த மர்மம் விலகியது:  மாணவி ஸ்ரீமதி இரவில் பள்ளியில் இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு  இரவு 9.30 மணிக்கு பிறகு என்ன நேர்ந்தது?
x

கடந்த ஒரு வாரமாக கண்காணிப்பு கேமரா பதிவுகள் வெளியாகாமல் மர்மம் நீடித்த நிலையில், மரணமடையும் முன்பு மாணவி ஸ்ரீமதி பள்ளியில் இருக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி


சின்னசேலம்,

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி செல்வி. இவர்களது மகள் ஸ்ரீமதி(வயது 17), மகன் சந்தோஷ்.

ஸ்ரீமதி, கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். சந்தோசும் அதே பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். இவன் தினசரி பள்ளி பஸ்சில் வீட்டுக்கு சென்று வந்தான்.

இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளி நிர்வாக தரப்பில் ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

ஆனால் இதை அவரது பெற்றோர் ஏற்கவில்லை, சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். இதில் கடந்த 17-ந்தேதி பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம், பெரிய கலவரத்தில் முடிந்தது.

போலீசாரிடம் முறையிட்ட தாய்

இதற்கிடையே மாணவியின் மரணம் தொடக்கத்தில் இருந்தே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி வந்தது. ஏனெனில் ஸ்ரீமதி கடந்த 13-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு மேல் பள்ளி வளாகத்தில் விழுந்து கிடந்ததை முதலில் அங்கிருந்த காவலாளி மண்ணாங்கட்டி (வயது 62) என்பவர் பார்த்துள்ளார். அதன்பின்னர் தான் மற்றவர்கள் பார்த்து கள்ளக்குறிச்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது.

அதேநேரத்தில் மாணவியின் தாய் செல்வி, தனது மகளுக்கு நேர்ந்த நிலை குறித்து தனக்கு பள்ளி நிர்வாக தரப்பில் இருந்து 6 மணிக்கு பின்னர் தான் தகவல் தெரிவித்ததாக கூறினார். மேலும் தனது மகள் இறந்தது குறித்து ஏன் தாமதமாக தன்னிடம் தெரிவிக்க வேண்டும், அதற்கான காரணம் என்ன என்று செல்வி போலீஸ் அதிகாரிகளிடம் அன்றைய தினமே முறையிட்டார்.

கண்காணிப்பு கேமரா காட்சிகள் எங்கே?

மேலும் பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தன்னிடம் காண்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். ஆனால் பள்ளி நிர்வாக தரப்பில் பள்ளி விடுதி அமைந்துள்ள 3-வது மாடியில் கண்காணிப்பு கேமரா வைக்கவில்லை. மாறாக பள்ளியாக செயல்பட்டு வந்த முதல் 2 தளங்களில் தான் கண்காணிப்பு கேமரா உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அங்கிருந்த கேமராக்களில் பதிவான காட்சிகள் வெளியிடப்படவில்லை. இதனால் மாணவி இறப்பு தொடர்பான சந்தேகம் மேலும் வலுத்தது. அதேநேரத்தில் சமூக வலைதளங்களில் வேறு சில வீடியோ பதிவுகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.

வெளியானது வீடியோ பதிவு

இவ்வாறு கண்காணிப்பு கேமரா பதிவுகள் தொடர்பாக கடந்த ஒரு வாரமாக நீடித்த மர்மம் நேற்று மாலை விலகியது. அதாவது, மாணவி ஸ்ரீமதி கடந்த 12-ந்தேதி இரவில் பள்ளியில் இருக்கும் வீடியோ பதிவு ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில், 2-வது தளத்தில் உள்ள பள்ளியின் ஒரு வகுப்பறைக்குள் (ஸ்டடி ரூம்) இருந்து வரண்டா பகுதியின் வழியாக ஸ்ரீமதி நடந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. மேலும் வீடியோவில் தேதியானது 12-ந்தேதி என்றும், 21.29 மணி என்று(அதாவது இரவு 9.29 மணி) என குறிப்பிடப்பட்டு இருந்தது.

வகுப்பறைக்குள் இருந்து வரும் ஸ்ரீமதி வரண்டாவில் தனியாக நடந்தபடி வந்து, பின்னர் மேல் தளத்துக்கு செல்லும் ஒரு படிக்கட்டில் ஏறிசெல்வது போன்ற காட்சி அதில் இடம்பெற்று இருந்தது.

இதன் மூலம், இரவு நடந்த சிறப்பு வகுப்பில் கலந்து கொண்டு விடுதிக்கு சென்ற மாணவி, அதன் பின்னர் தான் மரணம் அடைந்து இருக்கிறார். ஆனால் எந்த நேரத்தில், எவ்வாறு என்பது இன்னும் உறுதியாகவில்லை.

போலீசில் ஒப்படைத்தனர்

மேலும் மாணவி ஸ்ரீமதி விடுதியில் இருந்து குதித்து இருந்தாலும், தரைதளப்பகுதியில் அவர் விழுந்து கிடந்த பகுதி, மேலே இருந்து கீழே விழும் வழி ஆகிய அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளதா, அது தொடர்பான வீடியோ பதிவுகள் இருக்கிறதா? என்று பல்வேறு கேள்விகளுக்கு இன்னும் விடைதெரியவில்லை.

அதேவேளையில் பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் அனைத்தும் காவல்துறை வசம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டு விட்டதாக, பள்ளி நிர்வாகம் தெரிவித்து இருந்தது. எனவே இந்த வழக்கில் மேலும் வேறு வீடியோ பதிவுகள் வெளியாகி, அடுத்தக்கட்ட நகர்வுக்கு வழக்கை எடுத்து செல்லும் என்பது தெளிவாகிறது. இருப்பினும் நேற்று வெளியான வீடியோ பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story