திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இலங்கை தமிழர் தீக்குளிப்பு


திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இலங்கை தமிழர் தீக்குளிப்பு
x

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இலங்கை தமிழர் ஒருவர் தீக்குளித்தார். அவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இலங்கை தமிழர் ஒருவர் தீக்குளித்தார். அவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உண்ணாவிரதம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் தொடர்பு உடைய இலங்கை, வங்காளதேசம், ரஷியா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கை தமிழர்கள் சிலர் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை காலம் முடிந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், தங்களை விடுதலை செய்யக்கோரி கடந்த மே மாதம் 20-ந்தேதி முதல் 10-க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மரத்தில் ஏறி போராட்டம்

நேற்று 36-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இலங்கை தமிழர்கள், நாங்கள் 3 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வருகிறோம். எங்களை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் விடுதலை செய்ய வேண்டும், என்றனர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனிடையே இலங்கை தமிழர்கள் 4 பேர் திடீரென மரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். கோஷமிட்டபடி சிறிதுநேரம் மரத்தில் அமர்ந்திருந்த அவர்கள், பின்னர் கீழே இறங்கினார்கள்.

இலங்கை தமிழர் தீக்குளிப்பு

இந்நிலையில் இலங்கை தமிழர் உமா ரமணன் (வயது 41) என்பவர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சிறப்பு முகாம் வளாகத்தில் இருந்த வர்ணம் தீட்ட வைத்திருந்த வார்னீசை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் அவரது உடல் மற்றும் முகத்தில் தீப்பற்றிக்கொண்டது. உடனே முகாமில் இருந்தவர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிவந்து தீயை அணைத்தனர்.

இதில் தீக்காயம் அடைந்த உமா ரமணனை திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சிறப்பு முகாமில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடவடிக்கை

இந்த நிலையில் திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமுக்கு கலெக்டர் பிரதீப்குமார், போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் சென்றனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை தமிழர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். மேலும் முகாமை பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு செய்தார்.


Next Story