இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 பேர் மீது வழக்கு
நாகை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 பேர் மீது கடலோர காவல்குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வேதாரண்யம்:
நாகை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 பேர் மீது கடலோர காவல்குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மீனவர்கள் மீது தாக்குதல்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் இருந்து அஞ்சலையம்மாள் என்பவருக்கு சொந்தமான படகில் மணியன், வேல்முருகன், சத்தியராஜ், கோடிலிங்கம் உள்ளிட்ட 4 பேரும் கோடியக்கரை அருகே 10 நாட்டிக்கல் தொலைவில் நேற்று முன்தினம் அதிகாலை மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அதிவேக பைபர்படகில் இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், வெள்ளப்பள்ளம் மீனவர்கள் 4 பேரையும் கத்தி, கம்பி உள்ளிட்ட கடுமையான ஆயுதங்களால் தாக்கி, 600 கிலோ வலை, ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து கொண்டு மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர்.
3 பேர் மீது வழக்கு
இதில் பலத்த வெட்டு காயம் அடைந்த 2 மீனவர்கள் உள்பட 4 மீனவர்களும் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம், இலங்கை கடல் கொள்ளையர்கள் 3 பேர் மீது வழிப்பறி மற்றும் பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.