இன்றும், நாளையும் இலங்கை-நாகை பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம்


இன்றும், நாளையும் இலங்கை-நாகை பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 8 Oct 2023 6:56 AM IST (Updated: 8 Oct 2023 7:05 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை-நாகை இடையே பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் நடக்கிறது.

நாகை,

நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த சேவைக்காக இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் சார்பில் பயணிகள் கப்பல் கட்டும் பணி நடந்து வந்தது. இதையடுத்து இந்த கப்பல் கொச்சியில் இருந்து புறப்பட்டு இலங்கை வழியாக நேற்று மாலை 5 மணிக்கு நாகைக்கு வந்தது. நாகை துறைமுகத்தை வந்தடைந்த கப்பலுக்கு துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில், பயணிகள் கப்பல் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) நாகையில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து நாகைக்கும் சோதனை ஓட்டம் நடக்க உள்ளது. இதைத்தொடர்ந்து வருகிற 10-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது. இந்த கப்பலில் பயணிகள் 50 கிேலா எடை வரையில் எந்தவித கட்டணங்களும் இல்லாமல் தங்கள் உடமைகளை கொண்டு செல்லலாம். இந்த பயணத்துக்கு பாஸ்போர்ட், இ-விசா கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை 10 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது. அதன்பின்னர் வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் வங்க கடலில் புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக அந்த சேவை நிறுத்தப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காலம் முடிந்த பிறகு மீண்டும் ஜனவரி மாதம் முதல் இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நாள்தோறும் நடக்கும் என்று நாகை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story