தோட்டத்தில் இறந்து கிடந்த புள்ளிமான்
இடையக்கோட்டை அருகே தோட்டத்தில் புள்ளி மான் ஒன்று இறந்து கிடந்தது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா இடையக்கோட்டை அருகே கோமாளிப்பட்டி மலை அடிவாரத்தில் ஏராளமான விவசாய தோட்டங்கள் உள்ளன. இங்கு விவசாயி கருப்புச்சாமி என்பவரது தோட்டத்தில் நேற்று காலையில் புள்ளி மான் ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அய்யலூர் வனச்சரக அலுவலர் குமரேசன் தலைமையில் எரியோடு பிரிவு வனவர் கார்த்திகேயன், வனக்காப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், சவரியார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்த புள்ளிமானின் உடலை கைப்பற்றி, இடையக்கோட்டை அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு மானின் உடலை கால்நடை டாக்டர் மணிகண்டன் பரிசோதனை செய்தார். அதில் சுமார் 2 வயது உடைய பெண் புள்ளிமான் என்றும், தண்ணீர் குடிக்க வந்தபோது தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு இறந்து இருப்பதும் தெரியவந்தது. பின்னர் புள்ளிமானின் உடலை வனப்பகுதியில் புதைத்தனர்.