நாய்கள் கடித்து புள்ளிமான் சாவு
தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த புள்ளிமானை நாய்கள் துரத்தி கடித்தால் உயிரிழந்தது.
திருப்புவனம்
திருப்புவனம் ஒன்றியம் கீழடி பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் உள்ள கண்மாயில் அடர்ந்த கருவேலங்காடு உள்ளது. இதில் மான்கள் கூட்டம், கூட்டமாக வசித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று அதிகாலை சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்தது. அங்கு சுற்றித்திரிந்த நாய்கள் மானை விரட்டி உள்ளது. நாய்களுக்கு பயந்து பள்ளி வளாகத்திற்்குள் புள்ளிமான் ஓடியது. அதை விரட்டி சென்று நாய்கள் மானை கடித்து குதறியுள்ளன. இதனால் மான் பள்ளி வளாகத்திற்குள் இறந்து கிடந்தது. இது குறித்து அறிந்த தலைமை ஆசிரியை தேன்மொழி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். சிவகங்கை மாவட்ட வன அலுவலர் பிரபா அறிவுரையின் பேரில் வனச்சரக அலுவலர் பார்த்திபன், வனவர் ராஜேஷ், கொந்தகை வருவாய் ஆய்வாளர் வசந்தி, கீழடி கிராம நிர்வாக அலுவலர் பிரபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்த மானை பார்வையிட்டனர். கால்நடை டாக்டர் பவித்ரன் தலைமையில் இறந்த மான் பிரேத பரிசோதனை செய்து மேலக்காடு பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.