தெருநாய்கள் கடித்து புள்ளிமான் சாவு
தெருநாய்கள் கடித்து புள்ளிமான் இறந்தது
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வனப்பகுதிகள் அதிகம் உள்ளது. குறிப்பாக பிரான்மலை, எஸ்.வி.மங்கலம் போன்ற பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் வனவிலங்குகள் அதிகமாக சுற்றி வருகிறது. குறிப்பாக மான்கள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் நேற்று ஓசாரிபட்டி அருகே பட்டாகாடு தோப்பு பகுதியில் இருந்து ஒன்றரை வயது ஆண் மான் ஒன்று வழி தவறி ஊருக்குள் புகுந்தது. இதை பார்த்த ெதருநாய்கள் அந்த மானை கடிக்க துரத்தின.
இதனால் அந்த மான் நாய்களிடம் இருந்த தப்பிக்க ஓடியது. இருப்பினும் தெருநாய்கள் விடாமல் துரத்தி சென்று மானை கடித்து குதறின. இதில் படுகாயம் அடைந்த புள்ளிமான் ஓசாரிபட்டி கிருங்காக்கோட்டை சாலையோரத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனவர் உதயகுமார் தலைமையில் வனக்காப்பாளர் வீரைய்யா மற்றும் வனத்துறையினா், கால்நடை மருத்துவர் விரைந்து சென்று உயிருக்கு போராடிய மானை காப்பாற்ற முயற்சி செய்தனர். இருப்பினும் புள்ளிமான் இறந்தது. இதையடுத்து மானின் உடலை எஸ்.வி.மங்கலம் வடகாடு செடி வனப்பகுதிக்கு கொண்டு சென்று வனத்துறையினர் புதைத்தனர்.