முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்


முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
x

நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குலசேகரத்தில் ரூ.3 கோடி செலவில் விளையாட்டரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

முதல்-அமைச்சர் கோப்பை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் குமரி மாவட்ட பிரிவின்கீழ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது. இதன் தொடக்க விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பாரம்பரிய விளையாட்டுகள்

2022-2023-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் இன்று (அதாவது நேற்று) முதல் 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது. குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நம்முடைய முன்னோர்கள் சிலம்பம், களரி உள்ளிட்ட போர்கலைகளை நேர்த்தியாக கற்றுக்கொண்டதோடு, அடுத்த தலைமுறைக்கும் கலைகளை கற்றுக்கொடுத்து வருவது நமது மாவட்டத்திற்கு மிகவும் பெருமைக்குரியது ஆகும்.

நமது பாராம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுத்து இளைஞர்களை முழு ஆரோக்கியமானவர்களாக கொண்டுவர வேண்டுமென்ற நோக்கத்தின் அடிப்படையில் தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு விளையாட்டுகளை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கற்றுக் கொடுத்திட நிதி ஒதுக்கீடு செய்து, ஆணை பிறப்பித்துள்ளார். குமரி மாவட்டம் குலசேகரத்தில் ரூ.3 கோடி மதிப்பில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

சிலம்பம் விளையாடிய அமைச்சர்

தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் அனைவருடைய கரவொலியுடன் சிலம்பம் விளையாடி மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அதிகாரி ராஜேஷ், முன்னாள் கபடி வீரர் ராஜரத்தினம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர்கள் ஆனந்த், பி.எஸ்.பி.சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story