ஆன்மிக சொற்பொழிவு
விழுப்புரத்தில் ஆன்மிக சொற்பொழிவு
விழுப்புரம்
விழுப்புரம் தெய்வ தமிழ்ச்சங்கம் சார்பில் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 130-ம் ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆன்மிக சொற்பொழிவு விழுப்புரம் சங்கரமடத்தில் கடந்த 25-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் காலை 7 மணிக்கு ஹோமம், அபிஷேகமும், 8.30 மணிக்கு கிருஷ்ணயஜூர் வேத பாராயணமும், தொடர்ந்து தன்வந்தரி, ஆவஹந்தி, நவக்கிரக ஹோமங்களும் நடந்தன. அதன் பின்னர் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு சூக்தஹோமமும், 10 மணிக்கு சுவாசினி, கன்யா மற்றும் வடுக பைரவர் பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து, மாலை 6.30 மணிக்கு மஹா பெரியவா மகிமை என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இதில் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் கலந்துகொண்டு ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.
தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு கோ பூஜை, ஏகாதசி ருத்ர ஹோமம், விசேஷ அபிஷேகமும், காலை 10 மணிக்கு பரனூர் கிருஷ்ணபிரேமி சுவாமி முன்னிலையில் பூர்ணாகுதியும், மாலை 6 மணிக்கு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தியை முன்னிட்டு நகரின் மாடவீதிகளில் அவரது உருவபட வீதி உலாவும், இரவு 8.30 மணிக்கு திவ்ய நாம பஜனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சங்கரமடத்தின் மேலாளர் ராமமூர்த்தி மற்றும் தெய்வ தமிழ் சங்கத்தினர் செய்திருந்தனர்.