மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில்மாணவர்களுக்கான பேச்சு போட்டிகள்
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது.
காரைக்குடி
காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக பழனியப்ப செட்டியார் அரங்கத்தில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் பேச்சுப்போட்டியினை தொடங்கி வைத்து பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசினர்.
அப்போது அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் பெருமையையும் எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் பொருட்டும், சமூக விழிப்புணர்வையும், பொருளாதார முன்னேற்றம் குறித்தும் அறிந்து கொள்ளும் வகையிலும் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்களிடையே பல்வேறு தலைப்புக்களில் பேச்சு போட்டிகள் நடத்தி விழிப்புணர்வினை ஏற்படுத்திடும் பொருட்டு இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மாவட்ட அளவில் நடைபெறும் இப்போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புக்களை பெறுவர் என்று பேசினார்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர்பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், மத நல்லிணக்கம், மனிதநேயம், தமிழ் இனத்தினுடைய பெருமை, தமிழ் வரலாற்றின் தொன்மை, எல்லோரும் ஒன்றிணைந்து உருவாக்கக்கூடிய பொருளாதார வளர்ச்சி, தமிழகத்தினுடைய தொழில் முதலீடு, தொழில் வளர்ச்சி, தமிழக மனித வளத்தை மேம்படுத்துகின்ற முக்கிய விழிமையங்களை அடிப்படையாக கொண்டு நடத்தப்படுகின்ற இப்பேச்சு போட்டிக்கு முதல்-அமைச்சர் இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில், ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தை பெருமைப்படுத்தியுள்ளார்.
இந்தாண்டு நடைபெறும் இப்போட்டி கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சு போட்டிகளாக நடத்தப்படுகிறது என்றார். நிகழ்ச்சியில், மாங்குடி எம்..எல்.ஏ., அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி, முன்னாள் அமைச்சர் தென்னவன், மாநில ஒருங்கிணைப்பாளர் அழகிரிசாமி, காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நாகனி செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.