கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டி; அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்


கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டி; அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 26 March 2023 12:15 AM IST (Updated: 26 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டியை, அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டியை, அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

பேச்சு போட்டி

திராவிட மாடல் என்ற லட்சியத்தை தமிழக கல்லூரி மாணவ-மாணவிகளிடம் கொண்டு செல்லும் விதமாகவும், பாடத்திட்டங்களை கடந்து மாணவர்கள் தெரிந்து கொள்ள பல விஷயங்கள் உள்ளது என்பதை அவர்களுக்கு உணர்த்தும் விதமாகவும் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் சார்பில் தமிழகத்தில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் சார்பில் நேற்று தூத்துக்குடி மாவட்ட கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள் நடந்தது. தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் நடந்த இதன் தொடக்க விழாவிற்கு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமை தாங்கினார். வ.உ.சி. கல்வியியல் கல்லூரியின் செயலாளர் ஏ.பி.சி.வீ.சண்முகம் முன்னிலை வகித்தார். மாநகராட்சி மேயர் ஜெகன், பேச்சுப் போட்டிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அழகிரிசாமி, நெடுஞ்செழியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அமைச்சர் தொடங்கி வைத்தார்

விழாவில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார். இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 33 கல்லூரிகளில் இருந்து சுமார் 108 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் மாவட்ட அளவில் முதல் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், 2-ஆம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், 3-ஆம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.3 ஆயிரமும் பரிசாக வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் வெற்றியாளர்கள் மாநில அளவில் நடக்கும் பேச்சுப் போட்டிக்கு செல்வார்கள். மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இறுதிப் போட்டியின் போது பரிசுகளை வழங்குவார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார், தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், கல்லூரியின் இளைஞர் நலத்துறை ஒருங்கிணைப்பாளர் சந்திரமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வீரபாகு தலைமையில் மாவட்ட மற்றும் கல்லூரி இளைஞர் நலத்துறை ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரமதி மற்றும் பேராசிரியர் ஜாக்சன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story