கோவில்களில் சிறப்பு வழிபாடு


கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

அரியலூர்

சிறப்பு வழிபாடு

ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று அரியலூர் மாவட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் தா.பழூரில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் விசாலாட்சி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் விசாலாட்சி அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அம்பாளுக்கு மங்கள இசையுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிலின் உள்ளே அம்பாள் பிரகார உலா நடைபெற்றது.

பால்குடம் எடுத்த பக்தர்கள்

தா.பழூரில் உள்ள பால ஆஞ்சநேயர் கோவிலில் தீப லெட்சுமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் காட்சி அளித்தார். பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கலந்து கொண்ட பெண்கள் தங்கள் குடும்பம் நலம் பெற வேண்டியும், விவசாயம், தொழில் உள்ளிட்டவை சிறப்புடன் நடைபெற வேண்டியும் விளக்கு பூஜை செய்தனர்.

இடங்கண்ணி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு நேற்று அந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தத. இதில் பாப்பாக்குளம் கரையில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து சக்தி கரகம் சூடிக்கப்பட்டு, பக்தர்கள் மஞ்சள் நிற ஆடைகள் அணிந்து பால் குடங்களை சுமந்தபடி மேளதளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் எடுத்து வந்த பாலை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது.

குன்னம்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அண்ணா நகரில் உள்ள மாரியம்மன் கோவிலில் வேண்டுதலை நிறைவேற்ற ஏராளமான பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து, பய பக்தியுடன் கடந்த ஒரு வாரமாக விரதமிருந்து வந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று குன்னம் குளத்தில் சக்தி அழைத்து அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், பால்குடத்தை தலையில் சுமந்தும் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்கள் ஊர்வலமாக வந்து மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில் திரளான பத்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story