சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிவன் கோவில்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை நான்கு கால பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, கிரிப்பிரகாரத்தில் வலமும் வந்தனர். இதனால் கோவில் வளாகம் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. மேலும் கோவில் வளாகத்தில் பக்தி இன்னிசை, சொற்பொழிவு போன்றவை நடந்தது.

சுப்பிரமணிய சுவாமி கோவில்

மகா சிவராத்திரியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நேற்று முன்தினம் நள்ளிரவு இரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு நேற்று அதிகாலை வரை நான்கு கால பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

உடன்குடி

உடன்குடி அருகே செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவில் மற்றும் இதன் துணைக்கோவில்களான சிதம்பரேஸ்வரர் கோவில் மற்றும் சிவன் கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடுகள் நடைபெற்றது.

இதேபோல் தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் மற்றும் இக்கோவிலுடன் இணைந்த சுவாமி சிதம்பரஸ்வரர் கோவில், அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில்களிலும் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

ஆறுமுகநேரி- ஆத்தூர்

ஆறுமுகநேரி சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி இரவில் 4 கால பூஜைகளும், அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. இரவு முழுவதும் பக்தி சொற்பொழிவுகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆத்தூர் சோமநாத சுவாமி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஓம் நமச்சிவாயா எழுதும் போட்டி நடைபெற்றது. போட்டியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். இதி்ல் வெற்றி பெற்ற 6 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

எட்டயபுரம்- கழுகுமலை

எட்டயபுரம் அருகே முத்துலாபுரத்தில் அமைந்துள்ள பார்வதி சமேத பவானீஸ்வரர் கோவில், விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்களிலும் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள் நடந்தது.


Next Story