முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

பங்குனி உத்திரதிருவிழாவையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருச்சி

பங்குனி உத்திரதிருவிழாவையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

பங்குனி உத்திர திருவிழா

பங்குனி உத்திரத்தையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலின் உப கோவிலான போஜீஸ்வரர் கோவிலில் சண்முகநாதர், வள்ளி-தெய்வானை சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.

இதேபோல், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள காளவாய்பட்டியில் உள்ள பால தண்டாயுதபாணி கோவிலுக்கு பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்தனர் . தொடர்ந்து இரவு பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல் திருப்பைஞ்சீலி முருகன் கோவிலில் 44-ம் ஆண்டாக பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று காலை கொள்ளிடத்திலிருந்து பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தனர். முருகன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காட்டுப்புத்தூர்

தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூர் கடைவீதியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் பாலமுருகன் சன்னதி அமைந்துள்ளது. பங்குனி உத்திரத்தையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு நடத்தினர். மலரால் அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகன் வலம் வந்தார். பாலமுருகன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல காட்டுப்புத்தூர் அருகே உள்ள நத்தமேடு முருகன் கோவில், கரட்டுப்பட்டியில் உள்ள கீழ்பழனி முருகன் கோவிலில் முருகன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

துறையூர்

துறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். இதையொட்டி துறையூர் பாலக்கரை பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா ஆட்டோ ஸ்டாண்ட், திருச்சி ரோட்டில் உள்ள கார் ஓட்டுனர்கள் சங்கம், பஸ் நிலையத்தில் உள்ள வேன் ஸ்டாண்ட் உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. துறையூர் கரட்டுமலையில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். செல்லிபாளையத்தில் உள்ள குன்னூர் முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

வழிவிடு வேல்முருகன் கோவில்

இதுபோல் பங்குனி உத்திரத்தையொட்டி திருச்சி ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோவிலில் நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிக்கவச அலங்காரத்தில் முருகன்-வள்ளி-தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

திருச்சி கே.கே.நகர் சுப்பிரமணியநகர் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story