ஆடி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதிகளில் ஆடிவெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதிகளில் ஆடிவெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புராதனவனேஸ்வரர் கோவில்
திருச்சிற்றம்பலத்தில் உள்ள புராதனவனேஸ்வரர் கோவிலில் 51-வது ஆண்டு ஆடிப்பூரத்தையொட்டி பெரியநாயகி அம்பாளுக்கு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு யாகமும் நடைபெற்றது. தொடர்ந்து நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதேபோல் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள பாலத்தளி கிராமத்தில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் கோவிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்களின் வசதிக்காக பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் இருந்து அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் கோவிலுக்கு இயக்கப்பட்டன.
போத்தி அம்மன் கோவில்
திருச்சிற்றம்பலம் அருகே செருவாவிடுதி வனச்சுழலியல் பண்ணை காப்பு காட்டில் அமைந்துள்ள போத்தி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. உப்பு விடுதி அக்னி காளியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் காலை முதல் இரவு வரை கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
பாபநாசம்
பாபநாசம் அருகே நல்லூரில் அமைந்துள்ள கல்யாணசுந்தரேஸ்வரர் கோவிலில் உள்ள அஷ்டபுஜ மகாகாளியம்மன் சன்னிதி வளாகத்தில்
ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி நவ சண்டியாகம் 2-ம் யாகசாலை பூஜைகள் நடந்தது. நிகழ்ச்சியில் ஸ்ரீமத் வேலப்பன் தம்பிரான் சுவாமிகள் ஆதீனம் முன்னிலையில் யாகம் நடந்தது. அதனை தொடர்ந்து புனித நீரால் அஷ்டபுஜ மகாகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோவில் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஆய்வாளர் குணசேகரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம்
அதிராம்பட்டினம் நகரில் துர்கா செல்லியம்மன், கரையூர் தெரு சந்தன மாரியம்மன், திரவுபதி அம்மன், முத்தம்மாள் காளியம்மன், வீரமாகாளியம்மன், பெரியாச்சி அம்மன், களிச்சிஅம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. துர்கா செல்வியம்மன் கோவிலில் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.
கும்பகோணம்
ஆடி வெள்ளியையொட்டி கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் உள்ள துர்க்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் துர்க்கை அம்மனுக்கு நெய் விளக்கேற்றி வழிபட்டனர். அப்ே்பாது அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் மகாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் வரிசையில் நின்று துர்க்கை அம்மனை வழிபட்டனர். இதே போல் கும்பகோணத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம். ஆராதனைகள் நடைபெற்றன.