வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


தினத்தந்தி 12 Jun 2022 11:01 PM IST (Updated: 12 Jun 2022 11:31 PM IST)
t-max-icont-min-icon

வைகாசி விசாகத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

பெரம்பலூர்

வைகாசி விசாக திருவிழா

பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் அமைந்துள்ள பாலமுருகன் கோவிலில் 42-ம் ஆண்டு வைகாசி விசாக திருவிழா நடந்தது. இதையொட்டி பாலமுருகனுக்கு காலை 10 மணிக்கு மஞ்சள், தயிர், பால், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பாலமுருகனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து இரவு பாலமுருகன் திருவீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் பாலமுருகனை தரிசனம் செய்தனர்.

திரளான பக்தர்கள் தரிசனம்

பெரம்பலூர் அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பாலமுருகன் சன்னதியில் வைகாசி விசாகத்தையொட்டி அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு வழிபாடும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள தர்மசம்வர்த்தினி சமேத பஞ்சநந்தீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி சுப்ரமணியர் சன்னதியில் சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

வைகாசி விசாகத்தையொட்டி ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளத்தில் மலை மீது அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி கோவிலிலும், வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டபுரத்தில் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் கோவிலில் உள்ள தண்டாயுதபாணிக்கும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாக விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது.


Next Story