பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி நெல்லையில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி நெல்லையில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி கடைசி சனிக்கிழமை

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்வது சிறப்பு வாய்ந்தது. புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான நேற்று பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நெல்லை அருகே மேல திருவேங்கடநாதபுரத்தில் தென் திருப்பதி என அழைக்கப்படும் வெங்கடாஜலபதி கோவிலில் நேற்று அதிகாலையில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை நடந்தது. காலையில் சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது. இரவில் கருடசேவை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை சன்னியாசி கிராமத்தில் உள்ள வெங்கடாஜலபதி கோவிலில் காலையில் சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. நெல்லை சுத்தமல்லி வ.உ.சி. நகர் ஜெய்மாருதி ஞான தர்மபீடத்தில் ஒரே கல்லினால் 10 அடி உயரத்தில் உள்ள ராமர், சீதை, லட்சுமணபெருமாள், ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.

திரளான பக்தர்கள்

இதேபோல் நெல்லை சந்திப்பு வரதராஜபெருமாள் கோவில், பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவில், டவுன் கரியமாணிக்க பெருமாள் கோவில், குறிச்சி அக்ரஹாரத்தில் உள்ள கிருஷ்ணன் கோவில், பாளையங்கோட்டை ராமசாமி கோவில், கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை டவுன் மேல மாடவீதியில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் காலையில் திருமஞ்சனம், திருவாராதனம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு துளசி, துளசி தீர்த்தம், மஞ்சள் பொடி, குங்குமம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. இரவில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் கருடசேவை நடைபெற்றது.

கருடசேவை

நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் அதிகாலையில் எட்டெழுத்து பெருமாளுக்கும், பெரியபிராட்டி, இளையபெருமாள், ஆத்தியப்பர், மாயாண்டி சித்தர், ஆஞ்சேநேயருக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது. இரவில் கருடசேவை நடைபெற்றது

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஜடாயு தீர்த்தம் லட்சுமி நாராயணர் கோவிலிலும், காட்டுராமர் கோவிலிலும் சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை நடந்தது.


Next Story