பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பக்தர்கள் வழிபாடு
புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் வழிபடுவது சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த நிலையில் புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று நெல்லை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவில், திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி கோவில், சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில், டவுன் கரிய மாணிக்க பெருமாள் கோவில்களில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அங்கு காலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதேபோல் டவுன் லட்சுமி நரசிங்க பெருமாள், அருகன்குளம் காட்டு ராமர் கோவில், கொக்கிரகுளம் நவநீத கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் நேற்று புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நெல்லை சந்திப்பு சன்னியாசி கிராமம் வெங்கடாஜலபதி கோவில், வரதராஜபெருமாள் கோவில், குறிச்சி அக்ரஹாரம் நவநீத கிருஷ்ணன் கோவில்களில் நேற்று இரவில் கருட சேவை நடந்தது.
சிறப்பு பஸ்கள் இயக்கம்
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி கோவில்களுக்கு பக்தர்கள் எளிதாக சென்று வருவதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று 4 பஸ்களில் 220 பக்தர்கள் பயணம் செய்தனர். அவர்களுக்கு இனிப்பு, தண்ணீர் கேன் மற்றும் நவதிருப்பதி கோவில்களின் வரலாறு கையேடு ஆகியவை வழங்கப்பட்டது.