கொரோனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் 95 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயார்
கொரோனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் 95 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயாராக உள்ளது.
கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்பட 9 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து திருச்சியில் கடந்த மாதம் வரை ஒற்றை இலக்க எண்ணில் இருந்த பாதிப்பு தற்போது இரட்டை இலக்க எண்ணை தொட்டுள்ளது. இதனால் கொரோனா பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே திருச்சி அரசு மருத்துவமனையில் 95 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், நோயாளிகளுக்கு தங்கு தடையின்றி ஆக்சிஜன் வழங்குவதற்காக நாளொன்றுக்கு 21 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜனும் தயார் நிலையில் இருப்பதாகவும் அரசு மருத்துவமனை டீன் நேரு கூறினார். மேலும், பொது இடங்களில் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.