குரங்கு அம்மை நோய் சிகிச்சைக்கு சிறப்பு வார்டு


குரங்கு அம்மை நோய் சிகிச்சைக்கு சிறப்பு வார்டு
x

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் குரங்கு அம்மை நோய் சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு தொடங்கப்பட்டு உள்ளது.

மதுரை

மதுரை,

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் குரங்கு அம்மை நோய் சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு தொடங்கப்பட்டு உள்ளது.

குரங்கு அம்மை

ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பரவிய குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்க போன்ற நாடுகளுக்கு பரவி வருகிறது. இதையடுத்து இந்தியாவில் தீவிர கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

அதன் ஒரு பகுதியாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் குரங்கு அம்மை நோய்க்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளது. அங்கு தீவிர சிகிச்சை பிரிவுக்கு 16 படுக்கைகளும், அதிதீவிர சிகிச்சைக்கு 4 படுக்கைகளும் என மொத்தம் 20 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

சிகிச்சை

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், தமிழகத்தில் யாரும் இதுவரை குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இருப்பினும், முன்னெச்சரிக்கைக்காக, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அதிநவீன கருவிகளின் உதவியுடன் சிறப்பு படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

24 மணி நேரமும் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முதல் கட்டமாக சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் வரும் நோயாளிகளிடம் இருந்து சளி, ரத்தமாதிரி எடுக்கப்பட்டு, புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்படும்.

கொப்பளங்கள்

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருள்களை உபயோகிப்பதன் மூலம் அது மற்றவர்களுக்குப் பரவுவதாக கூறப்படுகிறது. கொரோனாவை போன்று, இந்த நோயும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து இருமல், தும்மலின் மூலமும் அது மற்றவர்களுக்குப் பரவும் ஆபத்து உள்ளது. காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் இதன் அறிகுறிகளாகும்.

இந்த நோயின் அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் சிகப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்பளங்களாக மாறும் என கண்டறியப்பட்டு உள்ளது. இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், அருகில் உள்ள அரசு மருத்துவமனையை தொடர்பு கொண்டு சிகிச்சை பெறலாம். குறிப்பாக இந்த நோய் பரவி வரும் நாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றனர்.


Next Story