சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
பட்டுக்குடி கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடத்திட தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சி பட்டுக்குடி கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் கணபதி அக்ரகாரம் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் சங்கமித்ரா, கால்நடை ஆய்வாளர் தமிழ்வாணன், பராமரிப்பு உதவியாளர் மதியழகன் ஆகியோர் ஆடு, மாடு, நாய், கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும், சில கால்நடைகளுக்கு சினைப் பரிசோதனை செய்து சினை ஊசி போடப்பட்டது. ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்கம் ஆகிய சிகிச்சைகள் அளித்து, கால்நடைகளுக்கு தாது உப்புகள் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.