வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி
வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 2-ம் நிலை பெண் காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் மதுரை, கோவை, விழுப்புரம் உள்பட 17 மாவட்டங்களை சேர்ந்த 2-ம் நிலை பெண் காவலர்கள் 273 பேர் கடந்த ஜூன் மாதம் முதல் 7 மாத கால பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுக்கு கவாத்து, யோகா, முதலுதவி அளித்தல், நன்னடத்தை, கலவரத்தை கட்டுப்படுத்துவது, சட்டம், துப்பாக்கி மற்றும் கணினியை கையாளுவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 2-ம் நிலை பெண் காவலர்களுக்கு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறப்பு பயிற்சி நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் காவல்துறை கட்டுப்பாட்டு அறை, குற்றப்பிரிவு ஆவண காப்பகம், கண்காணிப்பு கேமராக்களை பெரிய திரையில் கண்காணிக்கும் அறை உள்பட பல்வேறு பிரிவுகள் பற்றியும், அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது. மேலும் கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் வந்தால் அதனை உடனடியாக சம்மந்த போலீஸ் நிலையத்துக்கு தெரிவிப்பது, வாகன ஓட்டிகள் விபத்து மற்றும் விதிமீறலில் ஈடுபட்டால் கண்டறிவது, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றவழக்குகளில் ஈடுபடும் நபர்களை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்டறிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.