குருபெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள்


குருபெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள்
x

குருபெயர்ச்சியை யொட்டி கரூர் மாவட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கரூர்

குருபெயர்ச்சி

குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு நேற்றுமுன்தினம் இரவு 11.27 மணிக்கு இடம் பெயர்ந்தார். இதனையொட்டி கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடைபெற்றது. குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் நவகிரக சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் குருபகவானுக்கு சிறப்பு மூலமந்தர ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து குருபகவானுக்கு பஞ்சாமிர்தம், பால், பன்னீர், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் குருபகவான் பூக்களால் அலங்கரிக்கப்பட்டும், கொண்டை கடலை மாலை அணிவித்தும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் குருபகவானுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மேலும் நவகிரகங்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு, பூஜை நடந்தது. இதனைத்தொடர்ந்து இரவு 11.27 மணியளவில் குருபகவானுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து அர்த்த ஜாம பூஜைகள் நடைபெற்றன. இதில் கரூர், திருமாநிலையூர், பசுபதிபாளையம், தாந்தோன்றிமலை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் சாமி தரிசனம்

இதேபோல் கரூர் அண்ணாசாலையில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனையொட்டி நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் மகா சங்கல்ப பூஜைகள் நடைபெற்றன. இரவு 10 மணியளவில் கலச பூஜைகள், குருபகவானுக்கு மூலமந்திர, மாலாமந்திர ஹோமங்கள் நடைபெற்று மகாபூர்ணஹூதி நடைபெற்றது.

பின்னர் 11.27 மணிக்கு குருபகவானுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நொய்யல்

குருபெயர்ச்சியை முன்னிட்டு நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவிலில் குருபகவான் மற்றும் தட்சிணாமூர்த்திக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக கோவில் வளாகத்தில் அக்னி குண்டம் வைக்கப்பட்டு புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓதிஹோமம் செய்தனர். தொடர்ந்து மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு பரிகார பூஜையும், அர்ச்சனையும் நடைபெற்றது.

அதேபோல் புன்னம் பகுதியில் புன்னைவன நாதர் கோவிலில் உள்ள குரு பகவான், தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 7 ராசிக்காரர்களுக்கு பரிகார பூஜை நடைபெற்றது

வேலாயுதம்பாளையம்

வேலாயுதம்பாளையம் மலைவீதியில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குரு பகவானுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் கோவில் முன்பு யாகபூஜைகள் நடந்தது. இதில்மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகாரர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story