உலக சுற்றுலா தின சிறப்பு நிகழ்ச்சிகள்


உலக சுற்றுலா தின சிறப்பு நிகழ்ச்சிகள்
x

உலக சுற்றுலா தினத்தை கொண்டாடும் வகையில் ஒருவார கால சிறப்பு நிகழ்ச்சிகள் தஞ்சையில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது என கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.

தஞ்சாவூர்

உலக சுற்றுலா தினத்தை கொண்டாடும் வகையில் ஒருவார கால சிறப்பு நிகழ்ச்சிகள் தஞ்சையில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது என கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கல்லூரி மாணவர்களுக்கு போட்டி

சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் உலக சுற்றுலா தினத்தை கொண்டாடும் வகையில் ஒரு வார காலம் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சுற்றுலா மற்றும் இளைஞர்கள் என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரியில் நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தஞ்சை அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியம் குறித்த செயல்முறை பயிற்சி முகாம் நடக்கிறது.

வருகிற 27-ந் தேதி (புதன்கிழமை) காலை 7 மணிக்கு தஞ்சை பெரியகோவில் வளாகத்தில் தூய்மை பணி முகாம் மற்றும் தூய்மை உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து தஞ்சை பெரியகோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை பாரம்பரிய முறைப்படி வரவேற்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. அதேபோல் அன்று காலை 11 மணிக்கு தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் தூய்மை பணி முகாம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலமும், மாலை 6.30 மணிக்கு தஞ்சை மேலவீதி அய்யன்குளத்தில் சிறப்பு கலைநிகழ்ச்சியும் நடக்கிறது.

பாரம்பரிய நடைபயணம்

28-ந் தேதி காலை 7 மணிக்கு தஞ்சை பெரியகோவில் வளாகத்தில் இருந்து அரண்மனை வளாகம் வரை பாரம்பரிய நடைபயணம் நடக்கிறது. தொடர்ந்து காலை 10 மணிக்கு தஞ்சை அருங்காட்சியகத்தில் கோலப்போட்டி நடக்கிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கலாம். அன்று மாலை 5 மணிக்கு மனோராவில் தூய்மை பணி முகாம் மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 29-ந் தேதி காலை 10 மணிக்கு தஞ்சை ஓட்டல் சுவாத்மாவில் சுற்றுலா மற்றும் பசுமை முதலீடு என்ற தலைப்பில் கருத்தரங்கமும், மாலை 4 மணிக்கு தஞ்சை அருங்காட்சியகத்தில் சுற்றுலா தலங்கள் என்ற தலைப்பில் புகைப்பட போட்டியும் நடக்கிறது.

30-ந் தேதி காலை 10 மணிக்கு தஞ்சை அரண்மனை வளாக கலைக்கூடத்தில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு தஞ்சாவூர் சுற்றுலா என்ற தலைப்பில் ஓவியப்போட்டியும், மாலை 5 மணிக்கு கல்லணையில் தூய்மை பணி முகாம் மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. அடுத்தமாதம் (அக்டோபர்) 1-ந் தேதி சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கான சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story