தஞ்சை பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
தஞ்சை பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
பக்ரீத் பண்டிகையையொட்டி தஞ்சை பள்ளிவாசல்களில் நடந்த சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
பக்ரீத் பண்டிகை
இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும், தியாக திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இறைவனின் தூதர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக கருதப்படுபவர் இப்ராஹிம் நபிகளார். இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த இறைத்தூதர் இப்ராஹிமின் தியாகத்தை உலகுக்கு உணர்த்தும் விதமாக பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது.
பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து அதிகாலை முதலே பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டனர். தஞ்சை இர்வீன்பாலம் அருகே உள்ள ஜும்மா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நேற்றுகாலை நடந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். பின்னர் அவர்கள் அனைவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
சிறப்பு தொழுகை
இதேபோல் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அல்அன்சார் பள்ளிவாசல், கிரீன்சிட்டி அல்குர்ஆன் ரஹாத் பள்ளிவாசல், கும்பகோணம் பைபாஸ் சாலை மக்கா பள்ளிவாசல், பண்டிதர்நகர் ரஹ்மத் பள்ளிவாசல், அய்யனாபுரம் மதீனா பள்ளிவாசல், உக்கடை ஹலிமா பள்ளிவாசல், ரெயில்வே காலனி ஈத்கா பள்ளிவாசல், ரகுமான்நகர் அல்ரகுமான் பள்ளிவாசல், விசிறிக்காரதெரு ஹனபியா பள்ளிவாசல், செல்வம்நகர் அல்இஹசான் பள்ளிவாசல், நாஞ்சிக்கோட்டை சாலை அல்நூர் பள்ளிவாசல்.
எஸ்.என்.எம்.நகர் முஹையத்தின் அப்துல்காதர் ஜீலானி பள்ளிவாசல், சிராஜூதீன்நகர் மதினா பள்ளிவாசல், சேவப்பநாயக்கன்வாரி அபூபக்கர்ரலி பள்ளிவாசல், வண்ணாரப்பேட்டை முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல், அய்யங்கடைத்தெரு பட்வேகார் பள்ளிவாசல், வடக்குவாசல் ஜீனத்தை இஸ்லாமிய பள்ளிவாசல், மானம்புச்சாவடி ஜாமியா பள்ளிவாசல், ரெட்டிப்பாளையம் ரோடு அல்நூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல், பர்மாகாலனி ஜாமியா பள்ளிவாசல், தென்கீழ்அலங்கம் சீனிஅலாவா பள்ளிவாசல் மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்கேட் பகுதி, கீழவாசல் ஆட்டுமந்தை தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
பெண்கள் தொழுகை
தஞ்சை கீழவாசல் அறிஞர் அண்ணா திருமண மண்டப வளாகத்தில் தவ்ஹித் ஜமாத் சார்பில் நடந்த சிறப்பு தொழுகையில் இஸ்லாமிய பெண்கள் திரளாக கலந்து கொண்டு தொழுகை செய்தனர். பின்னர் இவர்கள் அனைவரும் பக்ரீத் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் இஸ்லாமியர்கள் பலர், தங்கள் வீடுகளில் ஆடுகளை குர்பானி கொடுத்து அவற்றை 3 சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்து விட்டு 3-வது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்தினர். மேலும் உறவினர்கள், நண்பர்களுக்கும் உணவு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.