கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
கிறிஸ்துமஸ் பண்டிகை
ஏசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் மாதம் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
நள்ளிரவு 12 மணியளவில் ஏசு பாலன் பிறப்பை உணர்த்தும் வகையில் கிறிஸ்துமஸ் குடிலில் ஆட்டு தொழுவத்தில் ஏசுவின் சொரூபம் வைக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெற்றது. பாதிரியார்கள் கிறிஸ்துமஸ் நற்செய்தியை வழங்கி பேசினர். பிரார்த்தனை முடிந்ததும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். மேலும் பண்டிகையையொட்டி கேக்களை ஒருவருக்கொருவர் வழங்கி அன்பை பரிமாறினர்.
அலங்கரிக்கப்பட்ட குடில்
புதுக்கோட்டையில் இருதய ஆண்டவர் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் குடிலில் ஏசுபாலன் சொரூபம் வைக்கப்பட்டிருந்தது. இதனை ஆர்வமுடன் பொதுமக்கள் பார்த்தனர். பண்டிகையையொட்டி புதுக்கோட்டையில் நேற்று காலை தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதிலும் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்தும், கேக் சாப்பிட்டும், பிறருக்கு கேக் மற்றும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடினர். தேவாலயங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
சிறப்பு திருப்பலி
அன்னவாசல், இலுப்பூர், மகுதுப்பட்டி, சாத்தம்பட்டி, உடையான்பட்டி, தாண்றீஸ்வரம், மாதாகோவில், மாங்குடி, வயலோகம், பெருஞ்சுனை, இரும்பாளி, பொம்மாடிமலை, அம்மாசத்திரம், பசுமலைப்பட்டி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. தேவாலயங்களில் ஏசுவின் பிறப்பை அறிவிக்கும் வகையிலான குடில் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் வண்ண விளக்குகள், பூக்களால் தேவாலயங்கள் அலங்கரிக்கப் பட்டிருந்தன.
குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள்
புத்தாடை அணிந்த கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றனர். பின்னர் ஒருவருக்கொருவர் கேக் வழங்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். ஏசு கிறிஸ்து பிறந்ததை சுட்டிக்காட்டும் வகையிலான தொட்டில்கள் தேவாலயங்களிலும், வீடுகளிலும் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் தங்கள் வீடுகளை வண்ண காகிதங்கள், நட்சத்திரங்கள், விளக்குகளால் கிறிஸ்தவர்கள் அலங்கரித்திருந்தனர்.
அன்னவாசல் கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். கிறிஸ்துமஸ் தாத்தாக்கள், பெரிய பைகளில் கொண்டு வந்த பரிசுப் பொருட்களை குழந்தைகளுக்கு வழங்கி மகிழ்வித்தனர்.