விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரியலூர் மாவட்டம் தா.பழூர் விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் உள்ள விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், கோபுர விநாயகர், கன்னி மூலை விநாயகர், சபை விநாயகர், உற்சவர் திருமேனி ஆகிய தெய்வங்களுக்கு பால், தயிர், தேன், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமி-அம்பாள், விநாயகர் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். சோடச உபச்சாரங்கள் செய்யப்பட்டது. மங்கள ஆரத்தி நடைபெற்றது.
பின்னர் வேத மந்திரங்கள் முழங்க விநாயகர் அகவல் உள்ளிட்ட விநாயகர் துதிகள் பக்தர்களால் பாராயணம் செய்யப்பட்டது. மாலையில் விநாயகர் உற்சவர் திருமேனிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பிரகார உற்சவம் நடைபெற்றது. அதன்பின்னர் மங்கள வாத்தியம் முழங்க ராஜ வீதிகளில் விநாயகர் வீதியுலா சென்றார். அப்போது பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாராதனை செய்தனர். விடையாற்றி உற்சவத்துக்கு பிறகு வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய விநாயகருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கணக்க விநாயகர்
மீன்சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள கணக்க விநாயகர் கோவிலில் விநாயகர்சதுர்த்தி விழா நடைபெற்றது. இதையொட்டி விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னர் கொழுக்கட்டை, அறுகம்புல், வெற்றிலை மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. கணக்க விநாயகருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம், கொழுக்கட்டை மற்றும் சுண்டல் வழங்கப்பட்டது.
சித்தி விநாயகர்
செந்துறை சிவந்தாண்டீஸ்வரர் கோவில் முன்பு அமைக்கப்பட்ட சித்தி விநாயகருக்கு யாகத்துடன் பூஜைகள் செய்து கண் திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக சித்தி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து யாக பூஜையுடன் தொடங்கி விநாயகரின் படையல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சித்தி விநாயகரை தரிசனம் செய்தனர். பின்னர் மேளம் தாளம் முழங்க வாண வேடிக்கையுடன் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், 3 நாட்கள் பூஜைகள் நடைபெற்று சித்தி விநாயகர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஜெயங்கொண்ட சோழபுரம் அருகே உள்ள அணைக்கரை ஆற்றங்கரையில் விநாயகர் சிலை கரைக்கப்படும் என விழா குழுவினர் தெரிவித்தனர்.
சந்தனகாப்பு அலங்காரம்
விளந்தை-ஆண்டிமடம் மேல அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரமும் அதனை தொடர்ந்து உற்சவர் சன்னதியை சுற்றி வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் போலீஸ் நிலையம் அருகே உள்ள செல்வ விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ஆண்டிமடம் வெற்றி விநாயகர், விளந்தை அழகு சுப்பிரமணியர் கோவிலில் உள்ள விநாயகர், புதுபிள்ளையார் கோவில், வரசித்தி விநாயகர் மற்றும் ஆண்டிமடத்தை சுற்றியுள்ள அனைத்து பிள்ளையார் கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.