முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வைகாசி விசாகம்
வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் அவதரித்த நாளே வைகாசி விசாகமாகும். இந்த நாளில் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி வைகாசி விசாகத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் முருகன் கோவில்களில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. புதுக்கோட்டை நகரப்பகுதியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சாமி கோவில், நைன ராஜ் தண்டாயுதபாணி சாமி கோவில் உள்பட முருகன் சன்னதிகள் அமைந்துள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.
சந்தனகாப்பு அலங்காரம்
குமரமலை முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. மேலும் சந்தன காப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சாமி புறப்பாடும் நடைபெற்றது. வைகாசி விசாகத்தில் முருகன் கோவில்களில் திரளான பக்தர்கள் சாமி தாிசனம் செய்தனர்.
மண்டையூர் பாலதண்டாயுதபாணி கோவில்
விராலிமலை ஒன்றியம், மண்டையூர் பாலதண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாக விழா நடைபெற்றது. அதை முன்னிட்டு கோவிலில் விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. தொடர்ந்து முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் மயில் மற்றும் குதிரை வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் மண்டையூர் பாச்சான் ஊரணி மற்றும் வீரம்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. மாலை 4 மணியளவில் பாலதண்டாயுதபாணிக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 9 மணிக்கு கோவிலில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாத்தூர், மண்டையூர், திருச்சி, கீரனூர், தொண்டைமான் நல்லூர், வீரம்பட்டி, சூரியூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை (சனிக்கிழமை) நடைபெறும் விடையாற்றி நிகழ்ச்சியுடன் வைகாசி விசாக விழா நிறைவு பெறுகிறது. பாதுகாப்பு பணியில் மண்டையூர் போலீசார் ஈடுபட்டனர்.
ஆவுடையார்கோவில்
ஆவுடையார்கோவில் குறிச்சிக்குளம் முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம், காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 5-ந்தேதி (திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.