முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
தைப்பூசத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு பூஜை
தைப்பூசம் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும். தை மாதம் பூசம் நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் ஒன்றாக வரக்கூடிய நாள் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி தைப்பூசத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது.
புதுக்கோட்டை நகரில் தண்டாயுதபாணி சாமி கோவில், நைன ராஜூ தண்டாயுதபாணி சாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் இன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. மேலும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நீண்ட வரிசை
புதுக்கோட்டை தண்டாயுதபாணி சாமி கோவிலில் பக்தர்கள் நீண்ட வாிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வரிசையானது கோவிலின் வெளியே சாலை வரை நீண்டிருந்தது. பக்தர்கள் பலர் முருகப்பெருமானுக்கு பால் குடம் எடுத்தும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். குமரமலை முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கறம்பக்குடி
கறம்பக்குடி முருகன் கோவிலில் தைப்பூச விழா விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. கறம்பக்குடி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலையில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் முருகப்பெருமான் வீதி உலா நடைபெற்றது. கறம்பக்குடியின் முக்கிய வீதிகள் வழியாக வந்த சுவாமிக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
இலுப்பூர்
இலுப்பூர் அருகே மலைக்குடிப்பட்டியில் இருந்து விராலிமலை முருகன் கோவிலுக்கு தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து பாத யாத்திரையாக விராலிமலை முருகன் கோவிலுக்கு சென்றனர். பின்னர் மலையை சுற்றி வந்து முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.