அம்மன் கோவில்களில் சிறப்பு பூைஜ


அம்மன் கோவில்களில் சிறப்பு பூைஜ
x

ஆடிப்பூரத்தையொட்டி, மாவட்டம் முழுவதும் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல், பழனி

ஆடிபூரத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. அதன்படி திண்டுக்கல்லில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு, அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

திண்டுக்கல் பாரதிபுரம் மாதா புவனேஸ்வரி அம்மன் கோவிலில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் பழனி பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அதன்படி பழனி ரயில்வே காலனியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வீதி உலா

பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி முத்துக்குமாரசாமி வள்ளி, தெய்வானை, பெரியநாயகி அம்மன், வீரபாகு, விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 16 வகை அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

அதன்பிறகு புதுச்சேரி சப்பரத்தில் சாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. தந்த பல்லக்கில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் நான்கு ரத வீதியில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பட்டிவீரன்பட்டி பகவதி அம்மன் கோவிலில் அம்மனுக்கு மஞ்சள், பால், விபூதி, பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு வளையல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

சின்னாளப்பட்டி திரு.வி.க.நகர் பகுதியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கர்ப்பிணிகள் வளைகாப்புக்கான மஞ்சள், குங்குமம், பழங்கள், பலவகை திரவியங்களை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் சமயபுரம் மாரியம்மனுக்கு சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், தயிர், தக்காளி, எலுமிச்சை, புளியோதரை, தேங்காய் சாதம் உள்ளிட்ட 7 வகை சாதங்களை படைத்து அம்மனுக்கு வளையல் பூட்டி வழிபாடு செய்தனர்.

அதன்பிறகு குழந்தை வரம் மற்றும் திருமண பாக்கியம் வேண்டி அம்மன் முன்பு அமர்ந்து பெண்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கர்ப்பிணிகளின் முகத்தில் சந்தனம் பூசி அவர்களுக்கு வளையல்கள் அணிவிக்கப்பட்டது. அதன்பிறகு நடந்த சிறப்பு தீப ஆராதனையை தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு 7 வகை உணவுகள் பரிமாறப்பட்டது.

நத்தம், கோபால்பட்டி

ஆடிப்பூரத்தையொட்டி கோபால்பட்டி காளியம்மன் கோவிலில், துர்க்கை அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நத்தத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் நேற்று ஆடிப்பூர விழா நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. வளையல் அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து விளக்கேற்றி தரிசனம் செய்தனர். இதேபோல் நத்தம் காளியம்மன், பகவதி, ராக்காயி, தில்லை காளியம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.


Next Story