பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
வேலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை, சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை, சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது.
புரட்டாசி சனிக்கிழமை
தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, அலங்காரம், அபிஷேகம் செய்யப்படும். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பெருமாளுக்கு படையலிட்டு வழிபாடு செய்வார்கள்.
புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையான இன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் அதிகாலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடந்தன.
வேலூர் அண்ணாசாலையில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் உள்ள சீனிவாச பெருமாளுக்கு காலை சிறப்பு பூஜை, வெள்ளிக்கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. அதிகாலை முதலே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டன.
சிறப்பு பூஜை
இதேபோன்று வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு காலை 7.30 மணிக்கு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. வேலூர்-ஆற்காடு சாலை சைதாப்பேட்டையில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் உள்ள சீனிவாச பெருமாளுக்கு காலை 6.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், துளசிமாலையால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
வேலூர் சத்துவாச்சாரி செல்வகணபதி கோவிலில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி, வேலூர்-காட்பாடி சாலையில் உள்ள சீனிவாச கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில், காட்பாடியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், வேலப்பாடியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில், காங்கேயநல்லூர், ரங்காபுரம், பிரம்மபுரம் வரதராஜபெருமாள் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும், மற்ற கோவில்களில் உள்ள பெருமாள் சன்னதிகளிலும் சிறப்பு பூஜை, அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது.
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை செய்து படையலிட்டு வழிபாடு செய்தனர்.
ஒற்றைக்கல் பாறை
ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை கிராமத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவிலும், கடல் மட்டத்தில் இருந்து 1200 அடி உயரத்திலும், ஜவ்வாதுமலை அடர்ந்த வனப்பகுதியில் மலை உச்சியில் எந்த ஒரு ஆதாரமும் இன்றி விளிம்பில் நிற்கும் ஒற்றைக்கல் பாறையில் வெங்கடாஜலபதி கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு 25 கிலோ மீட்டர் நடைபயணமாகவும் அல்லது இருச்சக்கர வாகனங்களில் தான் பெரிய ஏரியூர், தாமரைகுட்டை, கட்டியாபட்டு, தேந்தூர், கோராத்தூர், சட்டாத்தூர், பெரியபனைப்பாறை என 7 மலை கிராமங்களை கடந்து செல்ல முடியும். இங்கு ஒவ்வொரு சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது.
மேலும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மலை கிராம மக்கள் மட்டுமின்றி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சென்னை மற்றும் அண்டை மாநிலங்களான சித்தூர் போன்ற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுவார்கள். அதன்படி நேற்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தினர்.
கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் அடுத்த மேல்காவனுார் பத்மாவதி தாயார் சமேத திருவேங்கடமுடையான் கோவிலில் பிரம்மோற்சவ வைரமுடி சேவை நடைபெற்றது.
இதையொட்டி திருமஞ்சனம், தங்க கவச சேவை, உறியடித்தல், வழுக்குமரம் ஏறுதல், இரவு ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் திருவேங்கடமுடையான் சாமிக்கு வைரமுடி, கருடசேவை, வாத்திய இசை, வாண வேடிக்கையுடன் புஷ்ப பல்லக்கு வீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.
கே.வி.குப்பம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, சிறப்பு தரிசனம் நடைபெற்றன.
லத்தேரி ராதாருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலிலும், அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றன.
அன்னங்குடி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், அபிஷேகம், துளசி மாலை அலங்காரம், ஆராதனை நடைபெற்றது.
வள்ளிமலை
காட்பாடி தாலுகா வள்ளிமலை கிரிவலப்பாதையில் உள்ள அலர்மேல் மங்காநாயகி சமேத சுயம்பு தென்வெங்கடாஜலபதி கோவிலில் சாமிக்கு திருமஞ்சனம், சுதர்சன ஹோமம், சர்வ அலங்காரங்கள் நடந்தது. மூலவர் சுயம்பு தென்வெங்கடாஜலபதி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மாலையில் சாமி மாட வீதிகளில் உலா நடந்தது. தொடர்ந்து ஊஞ்சல் சேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.