அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அனுமன் ஜெயந்தி
மார்கழி அமாவாசையுடன் வரும் மூல நட்சத்திரத்தன்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று நாடு முழுவதும் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி செங்கம் நகரில் உள்ள வீரசுந்தர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்து வண்ண மலர்களால் மூலவருக்கு அலங்கரித்து மகாதீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து வீரசுந்தரஆஞ்சநேயர் மாடவீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வழி நெடுகிலும் நின்று திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல செங்கம் அருகே உள்ள அன்வராபாத் பகுதியில் உள்ள பிரம்மாண்ட ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து வண்ண மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை நடைபெற்றது.
மேலும் பல்வேறு ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்து தீபாராதனை நடந்தது. இதனையொட்டி பக்தர்களுக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டன.
பக்த ஆஞ்சநேயர்
கீழ்பென்னாத்தூர் மின்வாரிய முகப்பில் அமைந்துள்ள பக்த ஆஞ்சநேயர் கோவிலில் நேற்றுஅனுமன் ஜெயந்தி முன்னிட்டு காலையில் ஆஞ்சநேய சுவாமிக்கு துளசிமாலை, வெற்றிலைமாலை, வடை மாலை, மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு வழிபாடு, மகா தீபாராதனையும் நடந்தது.
இதில் மின்வாரிய உயரதிகாரிகள், பணியாளர்கள், ஊழியர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வந்தவாசி-ஆரணி
வந்தவாசி கவரை தெருவில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு வடைமாலை சாத்தப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.
ஆரணியை அடுத்த இரும்பேடு ஹரிஹகரன் நகரில் உள்ள விஸ்வரூப பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 5-ம் ஆண்டாக லட்சார்ச்சனை பெருவிழா நடத்தப்பட்டது. இதனையொட்டி கோவிலில் சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டன, தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகமும், 1008 இளநீரினால் அபிஷேகமும் நடத்தப்பட்டு, 50 ஆயிரத்து 8 வடமாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.
ஆரணி நகரில் சூரிய குளம் அருகே அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவில், தச்சூர் சாலையில் உள்ள கோதண்ட ராமர் கோவிலில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர், சார்ப்பனார் பேட்டை பகுதியில் அமைந்துள்ள கில்லா வரதராஜ பெருமாள் கோவில் அருகாமையில் உள்ள வரத வீர ஆஞ்சநேயர் கோவில், புதுகாமூர் பகுதியில் புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் படித்துறையில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர், கங்கை அம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சஞ்சீவி ராய அனுமான் கோவில், நகராட்சி அலுவலகம் முன்பாக உள்ள ஆஞ்சநேயர் கோவில், தச்சூர் சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், சிறுமூர். அருணகிரி சத்திரம், சுபான்ராவ் பேட்டை வீர ஆஞ்சநேயர் கோவில்கள், இரும்பேடு ஏ.சி.எஸ்.நகர் வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் அமைந்துள்ள பக்த ஆஞ்சநேயர் ஆகிய கோவில்களிலும் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.