கிருஷ்ணகிரி பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி - தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு பரிந்துரை


கிருஷ்ணகிரி பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி - தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு பரிந்துரை
x

கோப்புப்படம்

போலி என்.சி.. முகாம் நடத்திய கிருஷ்ணகிரி பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

போலி என்.சி.சி. முகாமில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை தனியார் பள்ளி ஒன்றில் என்.சி.சி. பயிற்சி முகாம் நடந்தது. இதில் போலி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால், 13 வயது மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அந்த பள்ளியில் அந்த பயிற்சிக்கு சென்ற மேலும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

மாணவியின் புகாரை அடுத்து அந்த போலி என்.சி.சி. பயிற்சியாளர் சிவராமன், அவருக்கு உதவியாக இருந்த உதவி பயிற்சியாளர்கள், தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர், சக ஆசிரியர்கள் என 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இரு குழுக்கள் உருவாக்கப்பட்டது. குறிப்பாக சிறப்பு புலனாய்வுக் குழு உருவாக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு உளவியல் ரீதியாக பயிற்சி அளிக்க சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையிலான பல்நோக்கு விசாரணைக் குழு உருவாக்கப்பட்டது. இந்த இரு குழுக்களும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக விசாரணை மற்றும் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன், தற்கொலைக்கு முயன்ற நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். தொடர்ந்து சிவராமனின் தந்தையும் உயிரிழந்தார்.

இந்த சூழலில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் போலி என்.சி.சி முகாம் நடத்திய கிருஷ்ணகிரி தனியார் பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என சென்னை ஐகோர்ட்டில் கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அதிகாரி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டதால் சிறப்பு அதிகாரியை நியமிக்க பள்ளி கல்வி இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இதனைத்தொடர்ந்து போலி என்.சி.சி. முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றக் கோரிய மனு வரும் 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதனிடையே கல்லூரிகளில் மாணவர்களிடம் மன அழுத்தத்தை குறைக்க பிரத்யோக உளவியல் ஆலோசனை மையங்கள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சிறப்பு குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story