கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அரியலூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், ஆலந்துறையார் கோவில், கோதண்டராமசாமி கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் பயபக்தியுடன் வழிபட்டனர். இதைத்தொடர்ந்து கோவில்களில் வைக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகளுக்கும் தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும், வீடுகளிலும் கொலு வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் நவராத்திரி 8-ம் நாளான நேற்று விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் விசாலாட்சி அம்மனுக்கு ஆண்டாள் அலங்காரம் செய்யப்பட்டு, மங்கள ஆரத்தி நடைபெற்றது. அபிராமி அந்தாதி உள்ளிட்ட பல்வேறு பதிகங்களை பாடி அம்மனை பக்தர்கள் வழிபட்டனர். மங்கள இசை ஆராதனையுடன் அம்மனுக்கு சோடச உபச்சாரங்கள் நடைபெற்றது. உடையார்பாளையத்தில் இன்ப மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி கொலு வைக்கப்பட்டது. பின்னர் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வஸ்த்திரம் சாத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.