மன ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களை கண்காணிக்க சிறப்பு குழு - தமிழக அரசு உத்தரவு


மன ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களை கண்காணிக்க சிறப்பு குழு - தமிழக அரசு உத்தரவு
x

கோப்புப்படம்

அரசு மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மன ரீதியாக பாதிப்புக்கு உள்ளான மாணவர்களை கண்காணிக்க சிறப்பு குழுவை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளுக்கும் மருத்துவ கல்வி இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கோவை மற்றும் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரிகளில் நடைபெற்ற சில சம்பவங்களுக்கு பிறகு, இந்த இயக்குனரகத்தின் கீழ் வரும் அரசு மருத்துவ கல்லூரிகளின் டீன்களுக்கு சில அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, டீன்கள், துணை முதல்வர், தலைமை வார்டன் உள்ளிட்ட அனைத்து வார்டன்கள், மனநோய் சிகிச்சை பிரிவு துறைத்தலைவர், நர்சிங் கண்காணிப்பாளர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட வேண்டும்.

குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த குழுவின் கூட்டம் நடத்தப்பட வேண்டும். சில மாணவர்களை சிறப்பாக கண்காணிக்க வேண்டும். அதன்படி, வகுப்புகளுக்கு நீண்ட நாட்களாக வராமல் இருக்கும் மாணவர்கள், தேர்வுகளில் தொடர்ந்து தோல்வி அடையும் மாணவர்கள்,

மற்ற மாணவர்களுடன் சேராமல் விலகி இருக்கும் மாணவர்கள், மனநோய் பாதிப்பு அல்லது மருத்துவ சிகிச்சையில் இருக்கும் மாணவர்கள் கண்காணிக்கப்பட வேண்டும்.

விளையாட்டு வசதிகள்

அப்படிப்பட்ட மாணவரின் அதே பாலினத்தைச் சேர்ந்த மூத்தவர் உடனடியாக கண்காணிப்புக்காக நியமிக்கப்பட வேண்டும். அவர் அந்த மாணவரை அணுகி அவர் கூறும் குறைகள் களையப்படுவதற்கு உதவ வேண்டும். அந்த மாணவரை பற்றிய அறிக்கை அவ்வப்போது குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மனநோய் பாதிப்புக்கான மருந்து உட்கொள்ளும் மாணவர்களும் கண்காணிக்கப்பட வேண்டும். அவர் பற்றிய தகவல்களும் தரப்பட வேண்டும். விடுதியில் உள்ள மாணவர்களிடம் ஏதாவது அசாதாரண செயல்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பெற்றோருக்கு தகவல் அளிக்க வேண்டும்.

விடுதிகளில் உள்ள ஓய்வு நேர பொழுதுபோக்கு அரங்கத்தில் டி.வி., இண்டர்நெட் வசதி பொருத்தப்பட வேண்டும். செஸ், கேரம், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட உள் அரங்க விளையாட்டுகளுக்கு வசதிகள், உடற்பயிற்சி வசதிகள் செய்துதரப்பட வேண்டும். யோகா பயிற்சிகள் அளிக்கலாம்.

அறிக்கை

தமிழ், ஆங்கில பத்திரிகைகள் தரப்பட வேண்டும். கால்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டு வசதிகள் அளிக்கப்பட வேண்டும். மாணவர் நல நிதி, மாணவர்களின் விளையாட்டு நிதி போன்ற ஏதாவது ஒரு நிதியை இதற்கு பயன்படுத்தலாம்.

விடுதி குழு உறுப்பினர்கள், மாணவர் பிரதிநிதிகள் ஆகியோர் சிறப்பு குழுவுக்கு அவ்வப்போது அறிக்கை அளிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கென்று மாணவர் குழுக்கள் நியமிக்கப்படலாம். அவர்கள் சிறப்பு குழுவுடன் இணைந்து குறிப்பிட்ட பிரச்சினைகள் பற்றி ஆலோசிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story