184 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள்
மாவட்டத்தில் 184 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடந்தன. இதில், 12 ஆயிரத்து 570 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
மாவட்டத்தில் 184 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடந்தன. இதில், 12 ஆயிரத்து 570 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
காய்ச்சல் முகாம்கள்
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படும் எனவும், குறிப்பாக காய்ச்சல் தொற்று அதிகம் உள்ள இடங்களில் நடமாடும் மருத்துவ வாகனங்கள் வாயிலாக முகாம்கள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடந்தது. மதுரையிலும் இந்த காய்ச்சல் முகாம்கள் நடந்தன. அதில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானவர்கள் கலந்து கொண்டு காய்ச்சல் பரிசோதனை செய்தனர்.
இதுபோல், இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் பரிசோதனை செய்து கொண்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக, ஒவ்வொரு முகாமிலும், டாக்டர்கள், நர்சுகள், ஆய்வக நுட்பனர், உதவியாளர்கள் பணியில் இருந்தனர். நடமாடும் மருத்துவக் குழுவினர் காய்ச்சல் தொற்று அதிகம் உள்ள இடங்களில் பரிசோதனையில் ஈடுபட்டனர்.
184 இடங்களில் முகாம்கள்
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், வழக்கமாக டிசம்பர், ஜனவரி மாதங்களில்தான் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகள் அதிகமாக இருக்கும். அதன்பின்னர், படிப்படியாக அந்த பாதிப்புகள் குறைய தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக, தற்போது வரை காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. இதன் காரணமாக, தமிழக அரசின் அறிவுறுத்தல்படி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. மதுரையை பொறுத்தமட்டில், நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மொத்தம் 184 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் நடமாடும் வாகனங்கள் மூலமும், கிராமப்புறங்கள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் சிறப்பு முகாம்கள் நடந்தன.
முகாம்களில் கலந்து கொண்டவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? அவர்களுக்கு எந்தமாதிரியாக பாதிப்பு உள்ளது? என்பது குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
12 ஆயிரம் பேருக்கு பரிசோதனை
அதன்படி, நேற்று ஒரே நாளில் மட்டும், 12 ஆயிரத்து 570 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 91 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது. அவர்களில் அதிக பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல், நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. கொசு ஒழிக்கும் பணிகளும் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.