சென்னையில் புயல், வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு இன்று சிறப்பு முகாம்


சென்னையில் புயல், வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு இன்று சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 12 Dec 2023 6:39 AM IST (Updated: 12 Dec 2023 10:18 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படவுள்ளன.

சென்னை,

மிக்ஜம் புயல் வெள்ளத்தால் அரசு சான்றிதழ்களை இழந்தவர்கள், அதனை மீண்டும் பெறுவதற்கான சிறப்பு முகாம் சென்னையில் இன்று நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: "மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னையில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்பு, இறப்பு, சாதி, இருப்பிடம், வாரிசு, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அரசு சான்றிதழ்களை இழந்தவர்கள், அவற்றை மீண்டும் கட்டணமின்றி பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும், இழந்த அரசு சான்றிதழ்களை மீண்டும் பெற இன்று (டிச.12) முதல் சிறப்பு முகாம்கள் தினந்தோறும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படவுள்ளன.

அதன்படி திருவொற்றியூர், மணலி, புழல், மாதவரம், அம்பத்தூர், பாடி, அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், தி.நகர், போரூர், வேளச்சேரி, அடையாறு, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உட்பட 46 பகுதி அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன."

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Next Story