கறவை மாடு கடன் வழங்க கிராமங்களில் சிறப்பு முகாம்


கறவை மாடு கடன் வழங்க கிராமங்களில் சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 25 Oct 2023 2:30 AM IST (Updated: 25 Oct 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் பால் உற்பத்தியை பெருக்கும்வகையில் கறவை மாடு கடன் வழங்க கிராமங்களில் சிறப்பு முகாம் நடத்தவேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவை முக்கிய தொழில்களாக இருக்கின்றன. இதில் விவசாயிகள் மட்டுமின்றி அனைவரும் கறவை மாடுகளை வளர்க்கின்றனர். பால் உற்பத்தியில் ஓரளவு வருமானம் கிடைப்பதால் கிராமம், நகரம் என்ற பாகுபாடு இல்லாமல் கறவை மாடு வளர்ப்பில் பலரும் ஈடுபடுகின்றனர். மேலும் கறவை மாடுகள் வாங்குவதற்கு வங்கி கடன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார். அப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பல்வேறு கிராமங்களில் சிறப்பு முகாம் நடத்தும்படி கலெக்டர் பூங்கொடி உத்தரவிட்டார்.

அதன்படி அடுத்த மாதம் கறவை மாடு கடன் வழங்கும் முகாம்கள் கிராமங்களில் நடைபெற இருக்கின்றன. இந்த முகாம்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ள பகுதிகளிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் கறவை மாடு கடன் வழங்க தேவையான ஆவணங்கள் அனைத்தையும் முகாம்களிலேயே பொதுமக்கள், விவசாயிகளிடம் கேட்டு அதிகாரிகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.அதை தவிர்த்து ஆவணங்களை கொண்டுவரும்படி வங்கிக்கு வரவழைத்து அலைக்கழிக்க கூடாது. அதேபோல் முகாம்கள் நடைபெறுவது தொடர்பாக கிராம மக்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பு செய்ய வேண்டும் என்றும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story