மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் சிறப்பு முகாம் ஒரேநாளில் 63 மனுக்களுக்கு தீர்வு
மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் நடந்த சிறப்பு முகாமில் ஒரேநாளில் 63 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டல அலுவலகங்களில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளுக்குட்பட்ட பொதுமக்கள் தங்களது பகுதி கோரிக்கைகள் குறித்து மனுவாக அளித்து அன்றைய தினமே தீர்வு பெற்றனர். இதில் நிலப்பிரச்சினை, குடிநீர் இணைப்பு, பாதாளசாக்கடை இணைப்பு, வரி தொடர்பான பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் வரப்பெற்றன. மண்டலம் எண் 4-ல் நடந்த முகாமில் உதவி ஆணையர் சண்முகம் மேற்பார்வையில் பொதுமக்கள் மனு அளித்தனர். இதில் உதவி வருவாய் அலுவலர் சுகுமார், கண்காணிப்பாளர் செந்தில்வடிவு, இளநிலை பொறியாளர்கள் ராஜ்பெரியசாமி, பாவாபக்ருதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் மாநகராட்சியின் 5 மண்டல அலுவலகங்களிலும் சேர்த்து மொத்தம் 227 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 63 மனுக்களுக்கு ஒரேநாளில் தீர்வு காண ஆணைகள் வழங்கப்பட்டன.