பி.எம்.கிசான் திட்டத்தில் ஆதார் விவரங்களை சரிபார்த்து புதுப்பிக்க சிறப்பு முகாம்
பி.எம்.கிசான் திட்டத்தில் ஆதார் விவரங்களை சரிபார்த்து புதுப்பிக்க சிறப்பு முகாம் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ளதாக கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
பி.எம்.கிசான் திட்டத்தில் ஆதார் விவரங்களை சரிபார்த்து புதுப்பிக்க சிறப்பு முகாம் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ளதாக கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
பி.எம்.கிசான் திட்டம்
இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
பிரதம மந்திரியின், பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்கும் வகையில் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. பி.எம்.கிசான் திட்டத்தில் ஆதார் விவரங்களை சரிபார்த்து உறுதிசெய்தால் மட்டுமே அடுத்த (14-வது) தவணைத்தொகை பெறமுடியும் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பி.எம். கிசான் நிதிஉதவி பெற்று வரும் வங்கி கணக்குடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதும் அவசியமாகும். ஈரோடு மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் தற்போது வரை 10 ஆயிரத்து 506 விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை சரிபார்த்து உறுதி செய்யாமலும், சுமார் 7 ஆயிரத்து 841 விவசாயிகள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமலும் உள்ளனர். எனவே ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நேற்று தொடங்கியது. இந்த முகாம் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வரை ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
முகாம் நடைபெறும் இடம்
அதன்படி அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் சத்தியமங்கலம் வட்டாரத்தில் கடம்பூர், பசுவனாபுரம், கராலயம் ஆகிய கிராமங்களிலும், தாளவாடி வட்டாரத்தில் மல்லங்குழி, பைனாபுரம் ஆகிய கிராமங்களிலும், நம்பியூர் வட்டாரத்தில் வேமாண்டம்பாளையம், ஒலலக்கோவில் ஆகிய கிராமங்களிலும், அம்மாபேட்டை வட்டாரத்தில் சனிச்சந்தை, ஒலகடம் ஆகிய கிராமங்களிலும், அந்தியூர் வட்டாரத்தில் தாமரைக்கரை, பிரம்மதேசம், அத்தாணி ஆகிய கிராமங்களிலும், பவானி வட்டாரத்தில் பருவாச்சி, கவுந்தப்பாடி, வரதநல்லூர் ஆகிய கிராமங்களிலும், பவானிசாகர் வட்டாரத்தில் புளியம்பட்டி கிராமத்திலும், சென்னிமலை வட்டாரத்தில் வெள்ளோடு, முருங்கத்தொழுவு, புஞ்சைபாலத்தொழுவு ஆகிய கிராமங்களிலும், ஈரோடு வட்டாரத்தில் மேட்டுக்கடை, சித்தோடு ஆகிய கிராமங்களிலும், கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் அயலூர், சிறுவலூர், கூகலூர் ஆகிய கிராமங்களிலும், கொடுமுடி வட்டாரத்தில் சிவகிரி, சோலங்காபாளையம் ஆகிய கிராமங்களிலும், மொடக்குறிச்சி வட்டாரத்தில் கஸ்பாபேட்டை, எழுமாத்தூர், அறச்சலூர் ஆகிய கிராமங்களிலும், பெருந்துறை வட்டாரத்தில் காஞ்சிக்கோவில், பெத்தாம்பாளையம், திங்களூர் ஆகிய கிராமங்களிலும், தூக்கநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் கொங்கர்பாளையம், காசிபாளையம் ஆகிய கிராமங்களிலும் பொது இ-சேவை மையத்தின் மூலம் பி.எம்.கிசான் திட்டத்தில் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
எனவே இதுவரை ஆதார் எண்ணை பி.எம். கிசான் திட்டத்தில் சரிபார்த்து உறுதி செய்யாத விவசாயிகள் மேற்காணும் கிராமங்களில் நடைபெற இருக்கும் சிறப்பு முகாம்களின் மூலம் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், தங்கள் பகுதி அஞ்சல் அலுவலகம் மூலமும் ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்து விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம்.
வங்கிக்கணக்கு
இதுவரை வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் உடனடியாக பி.எம்.கிசான் தொகை பெற்றுவரும் தங்களது வங்கிகளுக்கு ஆதார் அட்டையுடன் சென்று வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளவேண்டும். அவ்வாறு இணைக்க இயலாத விவசாயிகள் உடனடியாக தங்கள் அருகிலுள்ள கிராம அஞ்சல் நிலையங்கள் மூலம் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தபால் வங்கிகணக்கு தொடங்கி அதில் பி.எம்.கிசான் திட்ட நிதியினை பெறலாம்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் இதுதொடர்பாக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுவரை ஆதார் எண்ணை சரிபார்த்து உறுதிசெய்யாத விவசாயிகள் மற்றும் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் உடனடியாக சிறப்பு முகாம்களின் மூலம் பதிவுசெய்து திட்டப்பயன்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.