ஒரு மாதம் சிறப்பு முகாம்
மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய ஒருமாதம் நடைபெறும் முகாமில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய ஒருமாதம் நடைபெறும் முகாமில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
சிறப்பு முகாம்
சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தமிழகம் முழுவதும் இன்று(திங்கட்கிழமை) முதல் ஒரு மாத காலத்திற்கு மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்ற சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதன் அடிப்படையில் சிவகங்கை கோட்டத்திற்கு உட்பட்ட 7 பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு பெயர் மாற்ற முகாம் நடைபெற உள்ளது. எனவே பெயர் மாற்றம் செய்ய விரும்பும் மின் நுகர்வோர்கள் இந்த முகாம்களில் பெயர் மாற்றுவதற்கான கட்டணமாக ரூ.726-ஐ செலுத்தி பெயர் மாற்ற சேவையை பெற்றுக்கொள்ளலாம்.
முகாமில் வளாகங்களில் விற்பனை செய்பவர்கள் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் போது நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்களாக இருந்தால் ஆதார் அட்டை, சமீபத்திய சொத்து வரி ரசீது அல்லது விற்பனை பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல் அல்லது நீதிமன்ற உத்தரவு ஆகியவைகளையோ அல்லது பரிசு பத்திரம் செட்டில்மெண்ட் பத்திரம் போன்ற செல்லுபடி ஆகக்கூடிய ஆவணங்களை கொடுக்க வேண்டும்.
ஆவணங்கள்
நகராட்சி, மாநகராட்சி அல்லாத பகுதிகளை சேர்ந்தவர்கள் விற்பனை பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல் அல்லது ஏதேனும் செல்லுபடி ஆகக்கூடிய ஆவணங்களையோ, அல்லது நீதிமன்ற உத்தரவையோ கொடுக்க வேண்டும். இதேபோல் இறப்பின் காரணமாக பெயர் மாற்றம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் செட்டில்மெண்ட் பத்திரம் அல்லது சட்ட பூர்வ வாரிசு சான்றிதழ், ஆதார் அட்டை நகராட்சி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி ரசீது நகல் அல்லது உரிமை ஆவணத்தின் ஜெராக்ஸ் நகல் நகராட்சி, மாநகராட்சி அல்லாத பகுதிகளுக்கு உரிமை ஆவணத்தில் ஜெராக்ஸ் நகல் ஆகியவை கொடுக்க வேண்டும்.
இதேபோல் குழும வீடுகளில் பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பத்தாரர்கள் பில்டர்கள் அல்லது டெவலப்பர்கள் பெயரில் இருக்கும் பல குடியிருப்புகள், குடியிருப்பு வளாகங்கள் குரூப் ஹவுஸில் உள்ள பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய நலவாழ்வு சங்கத்தின் பெயரில் பதிவுச் சான்றிதழ் அல்லது வளாகம் அப்பார்ட்மெண்ட் பெயருக்கு மாற்ற விண்ணப்பத்தில் கையொப்பமிட குடியிருப்பாளர்களிடமிருந்து இருந்து அதிகார பூர்வ கடிதம் பெற்று இணைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.