போலீஸ் நிலையங்களில் மனு விசாரணை சிறப்பு முகாம்


போலீஸ் நிலையங்களில் மனு விசாரணை சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 9 April 2023 12:15 AM IST (Updated: 9 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் நேற்று மனு விசாரணை சிறப்பு முகாம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் நேற்று மனு விசாரணை சிறப்பு முகாம் நடந்தது.

சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி அனைத்து உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பொதுமக்களின் மனு மீதான விசாரணை சிறப்பு முகாம் நடந்தது.

அதன்படி தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் நடந்த மனு விசாரணையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தூத்துக்குடி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம், தூத்துக்குடி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் வனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

629 மனுக்கள்

நேற்று நடந்த இந்த சிறப்பு முகாமில் தூத்துக்குடி உட்கோட்டத்தில் 168 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதே போன்று தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 103 மனுக்களும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 61 மனுக்களும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 78 மனுக்களும், மணியாச்சி உட்கோட்டத்தில் 43 மனுக்களும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 54 மனுக்களும், விளாத்திக்குளம் உட்கோட்டத்தில் 61 மனுக்களும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 61 மனுக்களும் என தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மொத்தம் 629 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ரோந்து பணி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டனர். அதில் பழைய கொலை வழக்கு குற்றவாளிகள் 174 பேர்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களின் தற்போதைய இருப்பிடம் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் தணிக்கை செய்யப்பட்டது. இதுதவிர 32 ரவுடிகள் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 109 மற்றும் 110 ஆகிய பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 8 குற்றவாளிகளை கைது செய்தும், 18 சந்தேக நபர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தும் நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 145 தங்கும் விடுதிகள் சோதனையிடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வங்கிகள், நிதிநிறுவனங்கள், ஏ.டி.எம். மையங்கள், நகைக்கடைகள் உள்பட முக்கிய இடங்கள் கண்காணிக்கப்பட்டது. வாகன சோதனையில் ஆயிரத்து 825 வாகனங்கள் சோதனையிடப்பட்டு அதில் மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் உட்பட மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியதாக 859 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. சட்டவிரோதமாக மதுபான விற்பனை செய்ததாக 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 27 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.


Next Story