பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு இன்று முதல் 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கம்


பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு இன்று முதல் 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கம்
x

பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல வசதியாக இன்று முதல் 3 நாட்கள் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

சேலம்

சிறப்பு பஸ்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சேலம் கோட்டம் மூலம் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலம் செல்ல வசதியாக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 29-ந் தேதி வரை 3 நாட்கள் சேலம், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பயணிகள் அரசு விரைவு போக்குவரத்துக்கழக முன்பதிவு வழியாகவும், இணையதளம் (www.tnstc.in) மற்றும் App (tnstc bus ticket booking app) வழியாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

வார இறுதி விடுமுறை

வார இறுதி விடுமுறையையொட்டி சேலம் கோட்டம் சார்பில் இன்று முதல் 30-ந் தேதி வரை 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் சேலம் புதிய பஸ்நிலையம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருவுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருவுக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சீபுரத்திற்கும், ஈரோட்டில் இருந்து பெங்களூருவுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

எனவே, பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுமாறு சேலம் அரசு போக்குவரத்துக்கழக கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


Next Story