அரசின் சிறப்பு திட்டங்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்

அரசின் சிறப்பு திட்டங்கள் மீது அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை சிறப்பு செயலாளருமான ஹர்சகாய் மீனா தலைமை தாங்கினார். கலெக்டர் ஷ்ரவன்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அனைத்து துறைகள் சார்பில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்சகாய் மீனா கலந்துரையாடினார். தொடர்ந்து அவர் கூறுகையில், அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
ஒத்துழைப்பு
மேலும் தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் மீது தனிக்கவனம் செலுத்தி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இதற்கு அனைத்து துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். இதில் வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ஹஜிதா பேகம், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ரத்தினமாலா, கோட்டாட்சியர்கள் கள்ளக்குறிச்சி பவித்ரா, திருக்கோவிலூர் யோகஜோதி, நகராட்சி ஆணையர் குமரன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.