பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள்


பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள்
x
தினத்தந்தி 23 Dec 2022 12:15 AM IST (Updated: 23 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் அறங்காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை

திருப்பத்தூர்

புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் அறங்காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டு தரிசனம்

திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் புத்தாண்டு தினத்தன்று முதற்கடவுளாக கற்பக விநாயகர் உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கார், வேன், பஸ் உள்ளிட்ட சிறப்பு வாகனங்களில் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் புத்தாண்டு தினத்திற்காக இன்னும் 8 நாட்கள் மட்டும் உள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு வரும் பக்தர்களின் வசதிக்கேற்ப பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டனூர் கருப்பஞ்செட்டியார், ஆத்தங்குடி முத்துப்பட்டினம் சுப்பிரமணியன் செட்டியார் ஆகியோர் கூறியதாவது:-

ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதற்காக முதல் நாள் இரவு முதல் இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து தங்கியிருந்து புத்தாண்டு தினத்தன்று அதிகாலை முதல் சாமி தரிசனம் செய்வார்கள்.

பல்வேறு ஏற்பாடுகள்

இதையடுத்து புத்தாண்டு தினத்தையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. மேலும் மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மூலவர் முகப்பு பகுதியின் அருகே உற்சவர் கற்பகவிநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. பக்தர்கள் வரிசையாக நின்று சாமி தரிசனம் செய்யும் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் வசதி, உணவு வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதியும் செய்யப்பட உள்ளது.

மேலும் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் காரைக்குடி, திருப்பத்தூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிள்ளையார்பட்டிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தெரிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story