சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
திருநறையூர் ராமநாதசாமி கோவிலில் சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
திருவிடைமருதூர்:
கும்பகோணம் அருகே உள்ள திருநறையூரில் பர்வதவர்த்தினி சமேத ராமநாதசாமி கோவில் உள்ளது இங்கு சனி பகவான் ஜேஸ்டா தேவி, மந்தாதேவி ஆகிய இரு தேவியர்களுடன் மாந்தி குளிகன் ஆகிய குழந்தைகளுடன் குடும்ப சமேதமாக காட்சியளிக்கிறார். தசரத சக்கரவர்த்தி வழிபட்டு பெயர் பெற்ற தலம். பல்வேறு சிறப்புகள் பெற்ற இத்தலத்தில் தினம்தோறும் குளிகை காலத்தில் சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். அதன்படி நேற்று காலை 9 மணிக்கு நடைபெற்ற குளிகை கால சிறப்பு வழிபாட்டில் சனி பகவானுக்கு வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் செய்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளை ஆலய அர்ச்சகர் ஞானசேகர சிவாச்சாரியார் செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பிரபாகரன் ஆய்வாளர் சத்யா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.