வேன் விபத்தில் காயமடைந்த மாணவர்களுக்கு சபாநாயகர் அப்பாவு ஆறுதல்


வேன் விபத்தில் காயமடைந்த மாணவர்களுக்கு சபாநாயகர் அப்பாவு ஆறுதல்
x

நெல்லையில் நடந்த வேன் விபத்தில் காயமடைந்த மாணவர்களுக்கு சபாநாயகர் அப்பாவு ஆறுதல் கூறினார்.

திருநெல்வேலி

வள்ளியூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு உண்டு உறைவிட பள்ளி மாணவர்கள், பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெறுவதற்காக நேற்று முன்தினம் மதியம் வேனில் புறப்பட்டு வந்தனர். பாளையங்கோட்டை தெற்கு ஐகிரவுண்டு ரோட்டில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக வேனின் அச்சு முறிந்து, பின்பக்க டயர் வெடித்ததால் நிலைதடுமாறி சாலையோர வாறுகாலில் உருண்டு கவிழ்ந்தது.

இதில் வேனில் இருந்த 28 மாணவ-மாணவிகள், 4 ஆசிரியர்கள் காயமடைந்தனர். உடனே அவர்களை பாளையங்கோட்ைட ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

இந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு நேற்று காலையில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று, அங்கு சிகிச்சை பெறும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்களை சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார். காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டீன் ரேவதி பாலனிடம் கேட்டறிந்தார். காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சையை உடனுக்குடன் அளிக்குமாறும் உத்தரவிட்டார்.

தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story