அடுத்த 3 நாட்களுக்குள் கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை


அடுத்த 3 நாட்களுக்குள் கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை
x

கோப்புப்படம்

தென்மேற்கு பருவமழை இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் கேரளாவில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் கேரளாவில் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டு வருகிறது.

அதன்படி, தென்மேற்கு பருவமழை இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் கேரளாவில் தொடங்குவதற்கான வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்து இருக்கிறது. அதாவது, அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதிக்கு முன்னதாகவே ஆரம்பிப்பதற்கான சூழல் உள்ளது.

இந்த பருவமழை காலத்தில் தமிழ்நாட்டுக்கான மழை அளவு குறைவு என்றாலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பரவலாக மழை இருக்கும். அந்த வகையில் இந்த பருவமழையை அந்த பகுதியை ஒட்டியுள்ள மக்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.

இதுதவிர, தென் மாவட்டங்களின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல், நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) முதல் 3-ந்தேதி (திங்கட்கிழமை) வரை சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பம் அதிகரிக்கும்

கொளுத்தும் கத்திரி வெயில் காலம் நேற்றுடன் நிறைவு பெற்றாலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இன்றும், நாளையும் இயல்பைவிட 5 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரித்து காணப்படும்.

நாளை மறுதினமும், அதற்கு அடுத்த நாளும் (சனிக்கிழமை) அதிகபட்ச வெப்பநிலை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சற்று குறைந்து காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென் மாவட்ட கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்று முதல் நாளை மறுதினம் வரை இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.


Next Story