கேரளாவில் இன்று தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை


கேரளாவில் இன்று தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை
x

கோப்புப்படம்

தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 4-ந்தேதி வரை சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கோடை காலம் பொதுவாக மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நீடிக்கும். அந்த வகையில் கோடை காலம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த ஆண்டு கோடையில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவானது.

வெப்பம் உச்சத்தில் இருக்கக்கூடிய கத்திரி வெயில் காலத்தில் கோடை மழை பெய்ததால், தமிழ்நாட்டில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக வெப்பம் தணிந்து காணப்படுகிறது. இருப்பினும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் சில இடங்களில் சூரியன் சுட்டெரித்து வருகிறது.

வழக்கமாக கோடை காலம் முடிந்து, தென் மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் வாரத்தில் அதாவது, ஜூன் 1-ந்தேதி முதல் 5-ந்தேதிக்குள் தொடங்கும். ஆனால் நடப்பாண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்க இருக்கிறது.

கேரளாவில் தென் மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் (அதாவது இன்று) கேரளாவில் தொடங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.

நேற்று முன்தினம் ஆய்வு மையம் வெளியிட்டு இருந்த செய்திக் குறிப்பில் 3 தினங்களுக்குள் தென் மேற்கு பருவமழை கேரளாவில் ஆரம்பிக்கும் என்று தெரிவித்திருந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) பருவமழை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தென் மேற்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 32 செ.மீ. மழை பதிவாகும். அதாவது, ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டங்களில் பெய்யக்கூடிய இயல்பான மழை அளவு இது. இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் எந்த அளவுக்கு அதிகமாக இருந்ததோ, அதே அளவுக்கு நல்ல மழைப் பொழிவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பருவமழை செப்டம்பர் மாதத்தை கடந்து அக்டோபர் மாதம் வரையிலும் செல்லக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

பருவமழை தொடங்க உள்ளதன் காரணமாகவும், தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, இன்றும், நாளையும் (வெள்ளிக்கிழமை) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக் கூடும்.

நாளை மறுதினமும் (சனிக்கிழமை), அதற்கு அடுத்த நாளும் (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், திருச்சி, நாமக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா, அதனையொட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இன்றும், நாளையும் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.


Next Story